வெள்ளி, 29 ஆகஸ்ட், 2014

நாட்டின்பால் விசுவாசம்

“பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்” என்பது நம் நாடான மலேசியாவின் தேசிய கோட்பாடுகளுள் ஒன்றாகும். இக்கோட்பாடு மலேசிய மக்கள் ஒவ்வொருவரும் நாட்டின் பால் விசுவாசம் கொள்ள வேண்டுமென்பதை உணர்த்துகிறது. ஒவ்வோரு நாட்டுக் குடிமக்களும் தத்தம் நாட்டின் மீது பற்றும் விசுவாசமும் கொண்டிருக்க வேண்டும். ஒரு குழந்தை பிறந்த மறுவினாடியில் இருந்தே அந்நாட்டின் பிரஜை ஆகிறது. குழந்தை முதல் இறக்கும் தருவாயில் இருப்பவர்கள் வரை ஒவ்வொருவரும் தாம் பிறந்த மண்ணின் மீதும் நாட்டின் மீதும் விசுவாசம் கொண்டிருக்க வேண்டும். நாட்டு மக்கள் நாட்டின்பால் எவ்வாறு தங்களின் விசுவாசத்தைக் காட்டலாம்? பள்ளி மாணவர்கள் தங்களின் நாட்டுப் பாடலைத் தெரிந்து; கைவரப் பெற்று அதனை முழுமையாகப் பாடுதலின் வழி நாட்டின்பால் தாங்கள் கொண்டிருக்கும் விசுவாசத்தை தெரிவிக்கலாம். மலேசிய நாட்டுக் குடிமக்கள் தங்களின் நாட்டைப் பற்றி பிறர் அவதூராகப் பேசுவதையோ அல்லது நாட்டுக்குப் புறம்பான செயல்களைச் செய்வதையோ அனுமதிக்க கூடாது. அவ்வாறு செய்பவரைக் காவல் நிலையத்திற்குக் காட்டிக் கொடுத்து தங்களின் விசுவாசத்தைத் தெரிவிக்கலாம். மேலும் நாட்டின் அடையாளச் சின்னங்களை சொந்த பயன்பாட்டிற்குப் பயன்படுத்தாமல் இருப்பதாலும் நாட்டிற்கு நாம் காட்டும் விசுவாசம் என்றே பொருள்படுகிறது. மேலும் ஒவ்வொரு நாட்டு மக்களும் தாங்கள் பிறந்த மண்ணின் வரலாற்றைத் அவசியம் தெரிந்து வைத்திருப்பது நல்லது. அதுமட்டுமல்லாது தங்களின் விசுவாசத்தை நாட்டின்பால் தெரிவிக்கும் பொருட்டு, நாட்டின் சுதந்திர மாதத்தின் பொழுது நாட்டுக் கொடியைத் தங்கள் வசிப்பிடத்தின் முன்னும், வாகனங்களிலும் பறக்கவிடலாம். மேலும் பெற்றோர்களும் வீட்டு பெரியவர்களும் நாட்டின் சுதந்திர வரலாற்றைத் தங்களின் பிள்ளைகளுக்கு எடுத்துக் கூறி அவர்களுக்கும் நாட்டின் விசுவாசத்தை விதைக்கலாம். நாட்டைக் காவல் காக்கும் பொறுப்பில் இருக்கும் காவல் மற்றும் இராணுவ அதிகாரிகளும் தத்தம் நாட்டு இரகசியங்களை எதிரிகளுக்குத் தெரியாமல் பாதுகாத்து தங்களின் விசுவாசத்தைத் தெரிவிப்பது தலையாயக் கடமைகளில் ஒன்றாக அமைகின்றது. ஏனெனில் ஒரு நாட்டின் இரகசியத்தைப் பிற நாடுகள் தெரிந்து கொண்டால், அது நாட்டிற்குப் பெருங்கேடாக அமைந்துவிடும்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக