செவ்வாய், 2 செப்டம்பர், 2014

குடும்பம் ஒரு கோவில்

வாழ்க்கைக்கு அடிப்படையாக விளங்குவது குடும்பம். குடும்பம் ஒரு கோவில் என்றனர் நமது முன்னோர். கோவிலைச் சுற்றியே இந்தியச் சமூகம் நெடுங்காலமாக அமைந்து வந்திருக்கிறது. சமூகத்தின் ஆணி வேர் குடும்பம் என்பதால் அது கோவில் என அழைக்கப்படும் தகுதி உடையது.

சமுதாயத்தின் அடிப்படையே குடும்பம்தான். பிள்ளைகளுக்கு வீடுதான் முதல் பள்ளிக்கூடம், பெற்றோரே முதல் ஆசான்கள். ஒரு தனி மனிதனாகவும் சமுதாயத்தில் ஓர் உறுப்பியமாகவும் எதிர்காலத்தில் விளங்குவதற்கான அடிப்படை நிலை அங்குதான் உள்ளது. ஆகையால்தான், பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையேயுள்ள உறவு மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. நம் முன்னோர்கள், பெற்றோர்களை அனைவரும் தெய்வமாக எண்ணி மதிக்க வேண்டும் என்ற அரியதொரு கருத்தை அருளிச் சென்றுள்ளனர்.  இதனையே வேத வாக்காகக் கொண்ட சிலர் பல நூற்றாண்டுகளாக இவ்வழக்கத்தைப் பாதுகாத்துள்ளனர். ஆனால், இன்றோ இந்நிலை மாறிப்போய்ப் பிள்ளைகள் தங்களை மதிப்பதில்லையென்றும்; தங்களின் சொற்படி நடப்பதில்லையென்றும் பெற்றோர்கள் சிலர் முறையிடுகின்றனர். அதே வேளையில், குறைகூறும் பிள்ளைகளோ, பெற்றோர்கள் தங்களைப் புரிந்து கொள்வதில்லை என்று மறுபக்கம் புலம்புகின்றனர்.






மனித இனத்துக்கு முக்கியமான சந்தோஷம் நல்ல குடும்பச் சூழல்தான். கைநிறைய சம்பாதிக்கும் பலரும் ஏங்குவது அன்புக்குதானே!! கொடுக்க கொடுக்க ஆனந்தம் தருவது அன்பு. இனிமையான கதகதப்பான குடும்பச் சூழல் இந்த ஏக்கத்தை நிவர்த்தி செய்துவிடும். நம்பிக்கை, புரிதல், கருணை ஆகியவற்றை அள்ளித் தரும். சொர்க்கத்தை இறந்த பின் தான் அடைய வேண்டுமெனும் ஏக்கம் இல்லாமல் வாழும் வீடே சொர்க்கமாகி பிரச்சனைகள் எதுவந்தாலும் சுமூகமாகத் தீர்க்க வழி கொடுக்கும். இப்படிப்பட்ட சூழலில் வளரும் குழந்தைகள் வளர்ச்சி அளவிட முடியாமல் அதீதமாகவே இருக்கும்.



    சொத்து கொடுக்கிறோமோ இல்லையோ அன்பையும், கல்வியையும் கொடுத்தால் போதும். அதீத அன்பு ஆளையே அழித்துவிடும். கவனம் தேவை. அன்பு என்றால் தன்னலமற்ற அம்மாவின் அன்பைத்தானே அனைவரும் சொல்வோம்.

அன்னைதான் குழந்தையின் முதல் ஆசிரியை. இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.     அன்னையின் அன்பு, தந்தை கற்றுக்கொடுக்கும் உலக அறிவு இரண்டும் முறையாகச் சரியாகக் குழந்தைக்குக் கிடைத்தால் அதன் வளர்ச்சி மேல் சந்தேகமே வேண்டாம்.


    பெற்றோர் தம் குழந்தைகளைச் சிறு வயது முதலே, தொட்டு அணைத்து வளர்த்து வந்தால் பிள்ளைகள் வளர்ந்த பின்னும் பாசம் குறையாது. தாய் தன் குழந்தையை மார்போடு அணைத்து, முத்தமிட்டுக் கொஞ்சி, உறவாடுவதன் மூலம் ஆழமான பாசத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார், அதுபோல, தந்தையும் தன் பிள்ளைகளை மடியில் கிடத்தி, தோளில் தூக்கி, கரம் பிடித்து நடத்திச் சென்று பாதுகாப்பு உணர்வை ஊட்டுகிறார். சிறுவயதில் ஏற்படும் இந்த அனுபவம் ஆழ்மனதில் தங்கி, பிள்ளைகளுக்குப் பெற்றோரின் மேல் ஒரு பாசப் பற்றுதலை உண்டாக்குகிறது.
    பெற்றோர்கள் தம் பிள்ளைகளுடன் தினமும் பத்து நிமிடங்களாவது எந்த இடையூறுமில்லாமல்,  (தொலைபேசி, தொலைக்காட்சி, விருந்தினர்கள்) உறவாடலுக்குச் செலவிட வேண்டும். இந்த நேரத்தில் அவர்களுடைய பாடம், கல்வி போன்றவை பற்றிப் பேசாமல், அவர்களின் பாசம், நண்பர்கள், இலட்சியம், கனவுகள் பற்றிப் பேசுங்கள்.

    இந்த நேரம் அவர்களின் எதிர்காலத்தை உருவாக்கும் அடிக்கல் நேரம் மட்டுமல்ல, பெற்றோரின் அக்கறையை, பரிவைப் பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்லும் நேரமும் கூட. இந்த நேரங்களைப் பிற்காலத்தில் பிள்ளைகள் பெரிதும் எண்ணிப்பார்த்துப் பெருமிதம் கொள்வர்.


அம்மா, அப்பா, அண்ணன், அக்காள், தம்பி, தங்கை, தாத்தா மற்றும் பாட்டி அடங்கியதே ஒரு குடும்பம். குடும்பத்தில் ஒவ்வொருவரும் தங்கள் கடமைகளைச் சரிவர செய்ய வேண்டும். நம் குழந்தைகளுக்குச் சமய அறிவை ஒவ்வொரு குடும்பமும் புகுட்ட வேண்டும். இது குழந்தைகள் தீய வழிகளில் செல்லாமல் இருக்க வழிவகுக்கும். ஆகவே, நல்லதொரு குடும்பத்தைப் பிள்ளைகளுக்கு அளித்து நல்லவிதமாக வாழ வழி செய்வோம்.

1 கருத்து:

  1. LuckyClub Casino Site Review 2021 - Lucky Club
    Welcome to Luckyclub Casino ✓ Withdraw winnings luckyclub.live instantly! ✓ 100% up to €50 + 100 Free Spins ✓ €200 Welcome bonus! Rating: 4.2 · ‎Review by LuckyClub.me

    பதிலளிநீக்கு