செவ்வாய், 2 செப்டம்பர், 2014

மலேசிய அதிசயம்– கண்ணாடிக் கோவில்


உலகில் கோவில்களில் கண்ணாடி பயன்படுத்தப்பட்டது இப்போது துவங்கியதல்ல. அழகர்கோவில், காஞ்சீ ஏகாம்பரேஸ்வரர் கோவில் உள்பட நிறைய கோவில்களில் கண்ணாடி அறைகள் உண்டு. இங்கு சுவாமி எழுந்தருளும்போது நாம் உள்ளே சென்றால், கடவுளுடன் நாமும் பல நூறு இடங்களில் பிரதிபலிப்போம். கடவுள் திரு உருவைச் சுற்றி பல கோணங்களில் பல கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருப்பதால் நம் உருவம் நூற்றுக்கணக்கில் தோன்றும். வட இந்தியாவில் ரிஷிகேஷ் போன்ற தலங்களில் தற்காலத்தில் கண்ணாடிச் சிற்பங்கள் செய்துவைத்துள்ளனர். ஆயினும் இவை எல்லாவற்றையும் விஞ்சும் ஒரு அரிய சாதனையை மலேசிய இந்துக்கள் செய்துவிட்டனர்.



ஜோகூர் மாநிலத்தில் உள்ள ராஜ காளி அம்மன் கோவில் உலகிலேயே பெரிய, முதலாவது கண்ணாடிக் கோவில் என்றால் அது மிகை ஆகாது. மூன்று லட்சம் வண்ணக் கண்ணாடித் துண்டுகளால் ஜெகஜ் ஜோதியாக இந்தக் கோவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுவர்களை எல்லாம் நேபாள நாட்டில் இருந்த கொண்டுவரப்பட்ட மூன்று லட்சம் ருத்ராக்ஷ மணிகள் அலங்கரிக்கின்றன. ஆத்மலிங்க சந்நிதி நடு நாயகமாக ஜொலிக்கிறது. விளக்கு வெளிச்சத்தில் கண்ணைப் பறிக்கும் பிரகாசம் நம்மை மாயாஜால உலகில் கொண்டுபோய் நிறுத்திவிடும். இது அதிசயக்கத் தக்க ஒரு கட்டுமான விந்தை. மலேசியாவில் மாபெரும் சுற்றுலாக் கவர்ச்சி.
புத்தர், ஏசு, அன்னை தெரசா முதலிய பத்து பளிங்குச் சிலைகளும் பிரகாரத்தை அலங்கரிக்கின்றன. அத்தோடு பொற்சிலைகளும் உண்டு. இந்துக் கடவுளரின் உருவங்கள் எல்லாம் இங்கே ஒளிவீசுகின்றன.



கண்ணாடி பற்றிய விநோத நம்பிக்கைகள்

உலகில் கண்ணாடி பற்றிய விநோத நம்பிக்கைகள் ஏராளமாக இருக்கின்றன. இந்தியாவில் இதை சுபம் தரும் சின்னம்மாகக் கருதுவர். தமிழ் புத்தாண்டை ஒட்டி வரும் மலையாளிகளின் “விஷு” புண்ய காலத்தில் காலையில் தூங்கி எழுந்தவுடன் பார்க்கவேண்டிய பொருள்களில் கண்ணாடியும் அடக்கம். நவராத்ரி மற்றும் சுமங்கலி, கன்யாப் பெண்கள் பூஜைகளில் குங்குமம், சிமிழ், சீப்பு ஆகியவற்றுடன் கண்ணடியையும் கொடுப்பர். இது ஆண்டாள் காலத்தில் இருந்து வரும் வழக்கம் என்பதை திருப்பாவை இருபதாம் பாடலில் அவரே கூறுகிறார் (உக்கமும் தட்டொளியும்).

கண்ணாடி உடைந்தால் அபசகுனம் என்றும் அதில் முகம் தெரியாவிட்டால் மரணம் சம்பவிக்கும் என்றும் அச்சம் உண்டு. “கண்ணாடியில் படியும் மாசும், மூச்சுக் காற்றும் நீங்குவது போல” என்ற உவமை தமிழ், வடமொழி இலக்கியங்களில் பல இடங்களில் பயிலப்படுகின்றன. ஆதிசங்கரர் (விவேக சூடாமணி 291), திருவள்ளுவர் (குறள்706), ஆண்டாள் (பாவை 20), புத்தரின் தம்மபதம், தொல்காப்பியம் ஆகியவற்றில் கண்ணாடி பிரதிபலிப்பு பற்றிய உவமைகள் உள்ளன.

மேலை நாடுகளில் கண்ணாடியை ஒரு தாயத்தாக பயன்படுத்தினர். இதற்குக் காரணம் பேய்களுக்கு கண்ணாடியில் முகம் தெரியாதென்ற நம்பிக்கையாகும். இறந்தவர்களின் ஆவியை கண்ணாடிகள் பிடித்துவைத்துக் கொள்ளும் என்ற நம்பிக்கை காரணமாக பழங்காலத்தில் இறந்தவர்கள் இருக்கும் அறையில் கண்ணாடிகளைத் துணி போட்டு மூடிவைத்தனர். படுக்கைக்கு முன்னால் கண்ணாடி இருந்தால் தூக்கம் வராது என்ற வாஸ்து சாஸ்திரமும் உண்டு. கண்ணாடி பற்றி முஸ்லீம் கிறிஸ்தவ அறிஞர்களும் எழுதி வைத்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக