செவ்வாய், 2 செப்டம்பர், 2014


உலகில் கோவில்களில் கண்ணாடி பயன்படுத்தப்பட்டது இப்போது துவங்கியதல்ல. அழகர்கோவில், காஞ்சீ ஏகாம்பரேஸ்வரர் கோவில் உள்பட நிறைய கோவில்களில் கண்ணாடி அறைகள் உண்டு. இங்கு சுவாமி எழுந்தருளும்போது நாம் உள்ளே சென்றால், கடவுளுடன் நாமும் பல நூறு இடங்களில் பிரதிபலிப்போம். கடவுள் திரு உருவைச் சுற்றி பல கோணங்களில் பல கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருப்பதால் நம் உருவம் நூற்றுக்கணக்கில் தோன்றும். வட இந்தியாவில் ரிஷிகேஷ் போன்ற தலங்களில் தற்காலத்தில் கண்ணாடிச் சிற்பங்கள் செய்துவைத்துள்ளனர். ஆயினும் இவை எல்லாவற்றையும் விஞ்சும் ஒரு அரிய சாதனையை மலேசிய இந்துக்கள் செய்துவிட்டனர்.



ஜோகூர் மாநிலத்தில் உள்ள ராஜ காளி அம்மன் கோவில் உலகிலேயே பெரிய, முதலாவது கண்ணாடிக் கோவில் என்றால் அது மிகை ஆகாது. மூன்று லட்சம் வண்ணக் கண்ணாடித் துண்டுகளால் ஜெகஜ் ஜோதியாக இந்தக் கோவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுவர்களை எல்லாம் நேபாள நாட்டில் இருந்த கொண்டுவரப்பட்ட மூன்று லட்சம் ருத்ராக்ஷ மணிகள் அலங்கரிக்கின்றன. ஆத்மலிங்க சந்நிதி நடு நாயகமாக ஜொலிக்கிறது. விளக்கு வெளிச்சத்தில் கண்ணைப் பறிக்கும் பிரகாசம் நம்மை மாயாஜால உலகில் கொண்டுபோய் நிறுத்திவிடும். இது அதிசயக்கத் தக்க ஒரு கட்டுமான விந்தை. மலேசியாவில் மாபெரும் சுற்றுலாக் கவர்ச்சி.
புத்தர், ஏசு, அன்னை தெரசா முதலிய பத்து பளிங்குச் சிலைகளும் பிரகாரத்தை அலங்கரிக்கின்றன. அத்தோடு பொற்சிலைகளும் உண்டு. இந்துக் கடவுளரின் உருவங்கள் எல்லாம் இங்கே ஒளிவீசுகின்றன.



கண்ணாடி பற்றிய விநோத நம்பிக்கைகள்

உலகில் கண்ணாடி பற்றிய விநோத நம்பிக்கைகள் ஏராளமாக இருக்கின்றன. இந்தியாவில் இதை சுபம் தரும் சின்னம்மாகக் கருதுவர். தமிழ் புத்தாண்டை ஒட்டி வரும் மலையாளிகளின் “விஷு” புண்ய காலத்தில் காலையில் தூங்கி எழுந்தவுடன் பார்க்கவேண்டிய பொருள்களில் கண்ணாடியும் அடக்கம். நவராத்ரி மற்றும் சுமங்கலி, கன்யாப் பெண்கள் பூஜைகளில் குங்குமம், சிமிழ், சீப்பு ஆகியவற்றுடன் கண்ணடியையும் கொடுப்பர். இது ஆண்டாள் காலத்தில் இருந்து வரும் வழக்கம் என்பதை திருப்பாவை இருபதாம் பாடலில் அவரே கூறுகிறார் (உக்கமும் தட்டொளியும்).

கண்ணாடி உடைந்தால் அபசகுனம் என்றும் அதில் முகம் தெரியாவிட்டால் மரணம் சம்பவிக்கும் என்றும் அச்சம் உண்டு. “கண்ணாடியில் படியும் மாசும், மூச்சுக் காற்றும் நீங்குவது போல” என்ற உவமை தமிழ், வடமொழி இலக்கியங்களில் பல இடங்களில் பயிலப்படுகின்றன. ஆதிசங்கரர் (விவேக சூடாமணி 291), திருவள்ளுவர் (குறள்706), ஆண்டாள் (பாவை 20), புத்தரின் தம்மபதம், தொல்காப்பியம் ஆகியவற்றில் கண்ணாடி பிரதிபலிப்பு பற்றிய உவமைகள் உள்ளன.

மேலை நாடுகளில் கண்ணாடியை ஒரு தாயத்தாக பயன்படுத்தினர். இதற்குக் காரணம் பேய்களுக்கு கண்ணாடியில் முகம் தெரியாதென்ற நம்பிக்கையாகும். இறந்தவர்களின் ஆவியை கண்ணாடிகள் பிடித்துவைத்துக் கொள்ளும் என்ற நம்பிக்கை காரணமாக பழங்காலத்தில் இறந்தவர்கள் இருக்கும் அறையில் கண்ணாடிகளைத் துணி போட்டு மூடிவைத்தனர். படுக்கைக்கு முன்னால் கண்ணாடி இருந்தால் தூக்கம் வராது என்ற வாஸ்து சாஸ்திரமும் உண்டு. கண்ணாடி பற்றி முஸ்லீம் கிறிஸ்தவ அறிஞர்களும் எழுதி வைத்துள்ளனர்.

மலேசிய அதிசயம்– கண்ணாடிக் கோவில்

துங்கு அப்துல் ரகுமான் புத்ரா அல்-ஹாஜ் 


இவர் மலேசியாவின் முதல் பிரதமர் ஆவார். இவர் பிப்ரவரி 8, 1903ஆம் ஆண்டு அலோர் ஸ்டார், கெடா மாநிலத்தில் பிறந்தவர். துங்கு அவர்கள் கெடா மாநிலத்தின் 24ஆவது மன்னரான சுல்தான் அப்துல் ஹமீட் ஹலீம் ஷா அவர்களின் புதல்வனாவார். இவரைச் சுதந்திரத் தந்தை என்போம்.

துங்கு அவர்கள் சட்டத் துறை பயின்றவர். இவர் மலாய்க்காரர், சீனர் மற்றும் இந்தியர் ஆகிய மூவினங்களை ஒருமைப்படுத்தி ஒற்றுமையை வலுவோங்கச்செய்து மலேசியக் கூட்டணி கட்சியை உருவாக்கினார். நமது நாடு ஆங்கிலேயர் பிடியில் இருந்ததை விரும்பாது நமது நாட்டு சுதந்திரத்திற்காகப் பல போராட்டங்களையும் இன்னல்களையும் எதிர்கொண்டனர். இருப்பினும் தனது அறிவுப்பூர்வத்தால் ஆங்கிலேயர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி சுதந்திரத்திற்கு வழி வகுத்தார். துங்கு அப்துல் ரகுமான், துன் எச்.எஸ்.லீ மற்றும் துன் வீ.தி.சம்பந்தன் ஆகியோரின் கூட்டு முயற்சியால் நம் நாடு சுதந்திரம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

துன் வீ.தி. சம்பந்தன்





இவர் ஜூன் 16, 1919ஆம் ஆண்டு சுங்கை சிப்புட், பேராக்கில் பிறந்தார். இவர் தமது கல்வியைப் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்தார். அங்கு அவர் இலக்கியத் துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றுத் தாயகம் திரும்பினார். ‘துன்’ விருது பெற்ற முதல் தமிழர் இவரே.

நாடு திரும்பிய அவர், 1955இல் மலேசிய இந்திய காங்கிரசை (MIC), மலேசியக் கூட்டணி கட்சியில் (Parti Perikatan) இணைந்தார். 1955ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் கிந்தா தொகுதியில் (பேராக்) போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
மலாயா சுதந்திரம் அடைய துங்குவுடன் இந்திய மக்களின் பிரதிநிதியாக லண்டன் சென்று சுதந்திரப் பிரகடனத்தில் கையொப்பமிட்டார். மேலும், தோட்டத் தொழிலாளர்களுக்காகத் தேசிய நிலநிதிக் கூட்டுறவு சங்கத்தை 1960ஆம் ஆண்டு தோற்றுவித்தார். இந்தத் தேசிய நிலதிதிக் கூட்டுறவு சங்கம்தான் 1970ஆம் ஆண்டுகளில் ஆசியாவிலேயே மிகப் பெரிய கூட்டுறவு சங்கமாக விளங்கியது.


துன் எச்.எஸ்.லீ






இவர் கவுசாவ் (Gaozhou) என்ற இடத்திலிருந்து புலம்பெயர்ந்த வணிகரின் மூத்தப் புதல்வனாவார். இவர் ஹாங்கோங்கில் 19 நவம்பர் 1900இல் பிறந்தார். இவர் 1924ஆம் ஆண்டுகளில் தனது தந்தைக்கு வணிகத்தில் தோள் கொடுக்க மலாயாவுக்கு வந்தார். வந்த சிறு காலங்களிலேயே மலாயாவிலுள்ள அரசியல் கட்சிகளிலும் ஒரு சில கழகங்களிலும் தீவிரமாகச் செயல்படத் துவங்கினார்.

துன் எச்.எஸ்.லீ அவர்கள் மலேசிய சீனர் சங்கம் துவக்கத்திற்குப் பெறும் பங்காற்றியவர். இதனைத் தொடர்ந்து மலேசியக் கூட்டணி கட்சி (Parti Perikatan) உறுவாக்கத்திற்கு அடித்தளமானவராவார். இவர் துங்கு அப்துல் ரகுமான் மற்றும் துன் வீ.தி.சம்பந்தன் ஆகியோருடன் சுதந்திரத்திற்காகப் பாடுபட்டவராவார். மேலும், சீன சமூகம் மற்ற இன சமூகத்துடன் ஒற்றுமையாகச் செயல்படுவதற்கு இவர் பெறும் பங்காற்றியுள்ளார். மலாயா சுதந்திரத்திற்குப் பின், இவர் மலாயாவின் நிதித் துறை அமைச்சராகப் பதவியேற்றார். இன்றளவும் இவரது தியாகங்களை மலேசிய மக்கள் போற்றி வருகின்றனர்.

நமது தலைவர்களைப் போற்றுவோம்

மலாயா கூட்டரசின் தலைநகரான கோலாலம்பூரின் சிலாங்கூர் கிளப் திடல் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அவ்விடத்தைச் சுற்றியுள்ள கட்டடங்களும் அலங்கரிக்கப்பட்டு மிக அழகாகக் காட்சியளித்தன. மக்கள் கூட்டம் அரங்கில் நிறைந்து காணப்பட்டது. அனைவரின் பார்வையும் இரண்டு கொடி கம்பங்களின் மீதும் அருகே உள்ளே மணிக் கூண்டின் மீதுமே உள்ளது.



இன்று மலாயா கூட்டரசு மக்களின் வாழ்வில் ஒரு பொன்னாள், திருநாள். ஆங்கிலேயரின் ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெறும் இனிய நாள். இனி நம் மலேசியா நம் மக்களுக்கே சொந்தமாகும், நாமே ஆட்சி புரியபோகும் வரலாற்றுத் திருநாள்.

ஏழு வருடங்கள் கழிந்தது, 30 ஆகஸ்டும் வந்தது. கடிகார முள் இரவு மணி 11.50ஐ காட்டியது. மக்கள் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த நேரம் நெருங்கியது. கடிகார முள் மெதுவாக நகர்ந்து 12.00 மணியைக் காட்டியது. இதோ நாம் காத்திருந்த அந்த நேரம் வந்தது, மணியோசை முழங்குகின்றது. இங்கிலாந்து நாட்டுக் கொடியான ‘யூனியன் ஜெக்’ மெல்ல மெல்ல இறக்கப்பட்டது. சுதந்திர மலாயாவின் கொடி மெல்ல மெல்ல ஏற்றப்பட்டது, நாட்டுப்பண் இசைக்கப்பட்டது. கொடி பூமியைத் தொட்டதும் பல்லாயிரக்கணக்கான மக்களின் ஆனந்தமும் ஆரவாரமும் எல்லையின்றி சிறகடிக்கத் தொடங்கியது. மக்களின் கொண்டாட்டமும் அரங்கத்தை அதிரவைத்தது. இராணுவத்தினரின் குண்டு முழக்கங்கள் கேட்டன. வான வெடிகள் வெடிக்கப்பட்டன. அவை பல வண்ண நிறங்களாலும் வடிவங்களாலும் வானை அலங்கரித்தன.

அனைவரும் நம் நாட்டின் முதல் பிரதமரான துங்கு அப்துல் ரஹ்மான் அவர்களின் உரையைக் கேட்க ஆவலாய் காத்துக் கொண்டிருந்தனர். அவரும் “மெர்டேக்கா” என ஏழு முறை முழக்கமிட்டார். மக்களும் ஒவ்வொரு முறையும் அவரைப் பின் தொடர்ந்து அரங்கமே அதிரும் வண்ணம் இடியென முழங்கினர். அனைத்து இன மக்களும் எவ்வித பேதமும் இன்றி சகோதரத்துவத்தோடு மகிழ்ச்சியில் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவினர்.


மதிப்பிற்குரிய நமது பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மான் அவர்களால் அதிகாரப்பூர்வமாக நாடு விடுதலைப் பெற்றது அறிவிக்கப்பட்டது. பிரதான மேடையில் ஒவ்வொரு மாநிலத்தின் ஆட்சியாளர்களும் அமர்ந்துள்ளனர். பிரிட்டிஷ் அரசியாரின் பிரதிநிதி வெலிங்டன் மோகன் உரை நிகழ்த்தியதும் மாட்சிமை தங்கிய மாமன்னரிடம் விடுதலை ஆவனம் வழங்கப்பட்டது. அரங்கத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது, நமது பிரதமர் துங்கு அவர்கள் மக்களை நோக்கி கம்பீரமாக நின்று “மெர்டேக்கா” என முழங்கினார். அந்நேரம் மலர்ந்தது சுதந்திர மலாயா.




    மலாயாவின் சுதந்திர தின நினைவாக தேசிய தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு திங்கள் 31ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. சுந்திர நினைவு நாளை மையமாகக் கொண்டு கருப்பொருள் உருவாக்கப்படுகின்றது.


எடுத்துக்காட்டுகள்:-

1. KERANAMU MALAYSIA (2000-2005)
  உன்னால்தான் மலேசியா

2. BERSATU MAJU (1977)
  ஒன்றுபட்டு உயர்வோம்

3. BERJAYA (1990)
  வெற்றி

சுதந்திரத் தின வருணனை

1957ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மலாயா சுதந்திரம் அடைந்தது. 1963ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி மலாயா என்பது மலேசியா என்று மாறியது. அதுவரை தீபகற்ப மலேசியா எனும் நிலப்பகுதி மலாயா என்றே அழைக்கப்பட்டது. 1948ஆம் ஆண்டில் 1963ஆம் ஆண்டு வரை மலாயாவை, மலாயா கூட்டமைப்பு என்று அழைத்தனர். அதற்கு முன்னர் அது மலாயா என்றே அழைக்கப்பட்டது. வரலாற்று ஆவணங்களில் எல்லாவற்றிலும் மலாயா எனும் சொல்லே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. மலாக்காவைக் கண்டு பிடித்த பரமேசுவரா காலத்தில் தீபகற்ப மலாயாவை, மலாயா என்றே அழைத்தனர். ராஜ ராஜ சோழன் காலத்திலும் ஜெயவர்மண் ராஜவர்மன் காலத்திலும் மலாயாத் தீபகற்பம் மாலாயா என்றுதான் அழைக்கப்பட்டது. 1963ஆம் ஆண்டு மலாயாக் கூட்டரசு எனப்படும் தற்கால மலேசிய நாடாக உருவாகியது.

    1963 ஆகஸ்டு மாதம் 31ஆம் தேதி வட போர்னியோ சுயாட்சி பெற்றது. அதற்கு முன் 1962இல் கோபால்ட் ஆணையம் அமைக்கப்பட்டு மக்கள் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மலேசியாவில் இணைவதற்கு வட போர்னியோ மக்களுக்குச் சம்மதமா இல்லையா என்ற கணக்கெடுப்பு செய்யப்பட்டது. பெருவாரியான மக்கள் மலேசியாவில் இணைவதற்குச் சம்மதம் தெரிவித்தனர். இதில் வட போர்னியோ என்று அழைக்கப்பட்ட சபா, மலாயா, சரவாக், சிங்கப்பூர் ஆகியவை உறுப்பியம் பெற்றன.

    இவ்வனைத்து நாடுகளும் ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் இருந்தன. துங்கு அவர்கள் அவற்றை இணைத்து மலாயாவை ஒரு பெரிய நாடாக உருவாக்க எண்ணினார். மலாயாவுடன் இணைந்ததால் அவற்றிற்குச் சுதந்திரம் கிடைக்கும் என்று பிரிட்டிஷ் அரசாங்கம் அறிவுறுத்தியது. பேச்சு வார்த்தைகள் பல முறை தொடரப்பட்டன. சுதந்திரம் பெற்ற சிங்கப்பூர் 1965ஆம் ஆண்டு மலேசியாவிலிருந்து பிரிந்து தனி நாடாகியது.

    மலேசியா தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு நாடு. இந்நாடு தீபகற்ப மலேசியா எனவும் அழைக்கப்பட்டது. மலேசியா மேற்கு மலேசியா, கிழக்கு மலேசியா என்று இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டது. மலேசியாவில் 13 மாநிலங்கள் உள்ளன. அவற்றுடன் மூன்று கூட்டரசு மாநிலங்களும் இணைந்துள்ளன.
    மலேசியாவை மூவினங்களைக் கொண்ட கூட்டணிக் கட்சி ஆட்சி புரிந்தது. துங்கு அப்துல் ரஹ்மான் தலைமையில் ஆட்சி புரிந்த மலேசியா நல்ல மேம்பாடு கண்டு வந்தது. மூவினங்களைக் கொண்ட சிறந்த நாடாக மலேசியா விளங்கியது. 1971இல் மலேசிய அரசு ‘தேசிய பண்பாட்டுக் கொள்கையை’ அறிவித்தது. மலாய் மொழியே தேசிய மொழியாக அறிவிக்கப்பட்டது. மலேசியா சுல்தான்கள் கொண்ட ஆட்சியாக விளங்கியது.

மலேசியா பிறந்த கதை

மலேசியா ஒரு பண்பாட்டுக் கலவையான நாடு. மலாயா 1957இல் ஆங்கிலேய காலனித்துவ ஆட்சியிலிருந்து மீண்டு சுதந்திரம் பெற்றது. மலேசியா பல்லின மக்கள் வாழும் ஒரு நாடு என்று பொதுவாகக் குறிப்பிட்டாலும் இங்கு முக்கியமாக மூன்று இனத்தவர்கள் பெரும்பாண்மையாக வாழ்கின்றனர்.

நாடு நலம்பெறவும் மேலும் வலிமை பெற நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு வாழ்ந்து வருகின்றனர். சுதந்திர காலம் தொட்டு நாடு அனுசரித்து வரும் இந்த வலிமையை நிலைநாட்ட வேண்டும். நாம் பெற்ற மேம்பாடும் வளர்ச்சியும் நாட்டு மக்களின் இன, மத பாகுபாடு இல்லாத ஒன்றுபட்ட உணர்வால் உருவானவையாகும். உலக நாடுகளில் மலேசியா என்ற நாடு புகழ்வாய்ந்த நாடாக இன்று விளங்குவதற்குக் காரணம், இந்நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற பொருளாதார நிலைத்தன்மையும் அரசியல் நிலைத்தன்மையும் பல்லின மக்களின் ஒற்றுமையும் சிறந்த தலைமைத்துவமுமே ஆகும். இவை அனைத்தும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. இந்த வேளையில் நாட்டின் தேசியக் கோட்பாடுகளை நினைவுகூர்ந்து பார்ப்பது சாலச் சிறந்தது.

இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்.

இனம் மற்றும் நாடு எனப்படுபவை ஒரு வலுவான கடவுள் நம்பிக்கையில் உருவாக்கப்பட்டவையாகும். இந்நம்பிக்கையின் மூலம் இறையாண்மைக் கொண்ட நாடாக உருவாக்க முடியும். இஸ்லாம் மதம் நாட்டின் அதிகாரப்பூர்வ மதமாகும். மதம் இல்லாத ஒரு ஆளுமை, ஒரு நாட்டை வலுவிழக்கச் செய்யலாம் என்பதனை இக்கோட்பாடு உணர்த்துகிறது.

பேரரசருக்கும் நாட்டிற்கும் விசுவாசம் செலுத்துதல்.

இந்நாட்டின் குடிமகனாகிய நாம், பேரரசருக்கு விசுவாசத்தைச் செலுத்த வேண்டும். நாம் நமது பணிகளை நேர்மையான முறையில் இந்நாட்டிற்கு அர்பணிக்க வேண்டும் என்பது இக்கோட்பாட்டின் பொருளாகும்.
அரசியலமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைபிடித்தல்

இக்கொள்கையை மக்கள் ஏற்றுக் கொண்டு, அவற்றோடு இணங்கி விழுமிய அல்லது மகிமை அரசியலமைப்பைப் பாதுகாக்கும் தேவையை வலியுறுத்துகிறது. அதன் செயல்பாடானது குடிமக்கள் என்ற வகையில் அவர்களின் உரிமைகளையும் சலுகைகளையும் இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்பதாகும். இ•து அரசாங்கத்தின் அமைப்பு, சட்டமன்ற மற்றும் மக்கள் சமூக பொருளாதார உரிமைகள் தொடர்பான அனைத்து விஷயங்களுக்கும் மூலதனமாகும்.

சட்ட முறைப்படி ஆட்சி நடத்துதல்.

நீதி எனப்படுவது சட்டத்தின் ஆட்சி அடிப்படையில் அனைவருக்கும் சமம். அடிப்படை சுதந்திரங்கள், மலேசிய குடிமக்கள் அனைவருக்கும் உத்தரவாதம். மாநிலச் சட்டம், அரசியலமைப்பின் அடிப்படையாகும். ஆகையால் இறையாண்மையை ஏற்று காப்பாற்றப்பட வேண்டும். ஒவ்வொரு நாட்டிலும் அமைதியான நிலை மற்றும் வளமான ஒரு சமுதாயத்தை உருவாக்க ஒரு சட்டம் தேவை.

நன்னடத்தையும் ஒழுக்கத்தையும் பேணுதல்.

ஐந்தாவது கொள்கையானது மக்களின் ஆளுமை மற்றும் நடத்தை வளர்ச்சியை வலியுறுத்தும். இவற்றின் முதன்மை நோக்கமானது, ஒவ்வொரு குடிமகனையும் பண்பு மற்றும் கண்ணியமான ஒழுங்கு முறையில் உருவாக்கப்பட வேண்டும் என்பதாகும். மரியாதை மற்றும் ஒழுக்கம் ஒரு சமரச சமுதாயத்தை உருவாக்க உதவும். இந்தக் கொள்கை மக்களின் நடத்தையைப் பராமரிக்கப்பட்டு மற்றும் மதிப்புகள் ஆளுமை ஏற்ப உருவாக்கப்பட்டு ஒரு வழிகாட்டியாகத் திகழ்கின்றன.

ருக்குன் நெகாரா கோட்பாடு

மலேசியா ஒரு பண்பாட்டுக் கலவையான நாடு. பல்லின மக்கள் வாழும் ஒரு நாடு என்றும் கூட அழைக்கலாம். மலேசியா 1957இல் ஆங்கிலேய காலணித்துவ ஆட்சியிலிருந்து மீண்டு சுதந்திரம் பெற்றது. மலேசியா தோற்றம் பெற்றதால் தீபகற்ப மலேசியா, சபா, சரவாக் ஆகியவை பெரும் நன்மைகள் அடைந்தன.

    மலேசியாவைப் பற்றி கேட்டால் முதலில் பலருக்கும் ஞாபகம் வருவது கோலாலம்பூர்தான். நாட்டின் தலைநகரம் அது. ஒட்டு மொத்த மலேசியாவுக்கேச் சிறப்பைக் கூட்டும் பல அம்சங்கள் இங்கே உள்ளன. பெரிய கேளிக்கை விடுதிகள், கோயில்கள், மசூதிகள், புத்தர் ஆலயங்கள், விற்பனைக் கூடங்கள் எனக் கண்ணைக் கவரும் பல விஷயங்களுடன் வனங்களும் பாதுகாக்கப்படும் இயற்கையான காடுகளும் கூட அமைந்துள்ள ஒரு பகுதியாக விளங்குகின்றது.

    விமான நிலையத்தைத் தொடும் போதே, பிரமாண்டத்தைக் கொட்டிக்காட்டுகிறது. இந்த விமான நிலையம் 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விமானச் சேவை செய்து வருகிறது. அதுமட்டுமின்றி, நகரின் நடுவே உலகின் அதிசயமான கோலாலம்பூர் பெட்ரோனாஸ் என்ற இரட்டை கோபுரம் உள்ளது. உலகிலேயே உயரமான கோபுரம் 451.9 மீட்டர் உயரம் உள்ள இந்தக் கோபுரம், 88 அடுக்குகளைக் கொண்டது. இரட்டை கோபுரத்திற்கு அருகிலேயே பிரமாண்டமான மீன் காட்சியகத்தைக் காணலாம். அத்தனை மீன் வகைகள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களைக் கண்டு ரசிக்க முடியும்.

    மலேசியாவில் அமைந்துள்ள நீண்ட தூர ‘ஹைவே’ சாலையில் மணிக்கு 100 கி.மீ. வேகத்திற்கும் மேல் செல்ல முடியும். நேர்த்தியான சாலையில், விரைவாகச் செல்லலாம், சாலைகளில் குடுக்கீடுகல் கிடையாது; யாரும் கடப்பதும் இல்லை. தொடர்வண்டியின் சேவையினால் பல இடங்களுக்கு எந்தத் தடையின்றி விரைவாகவும் செல்ல முடியும்.

    மலேசியா இப்பொழுது பல்லினங்களைக் கொண்ட சிறந்த மக்களாட்சி நாடாக விளங்குகின்றது. இன ஒற்றுமைக்கு உலக அளவில் எடுத்துக்காட்டாக விளங்குகிறது. தொழில்துறைகளிலும் மேம்பாடு அடைந்து சிறந்து விளங்குகிறது. சுருங்கக் கூறின், மலேசிய நாட்டினால் மலேசியர் பல நன்மைகளை அடைந்து வருகின்றனர்.

மலேசியர் அடைந்த நன்மைகள்

அன்னை மலையகமே! அகிலத்தின் ஓர்துளியே!
                ஆழிசூழ் உலகினிலே அழகுமீன் வடிவமொடு
இன்னல் களைந்தே ஈட்டுகின்ற ஆட்சிமுறை
                மின்னலின் வேகத்தில் மீட்டுகின்ற முன்னேற்றம்!

இன்பத்தின் எல்லையிலே இனம்பாரா ஒற்றுமையும்
                இணைந்திருக்கும் மூவினத்தின் எடுப்பான உழைப்புமுறை!
துன்பத்தின் சாயலின்றித் தூய்மையின் வழியினிலே
                அன்பான நெறியினிலே ஆற்றுகிறார் தன் பணியை!

பெற்ற சுதந்திரம் பேணிடுவோம்
                பேரும் புகழும் ஈட்டிடுவோம்!
உற்ற துணையாய் விளங்கிடுவோம்!
                நாளும் ஊருணி போன்றே செயல்படுவோம்!

வந்துவந்து மக்கள் கூடி வானளாவச் சேரினும்
                தந்துதந்து பாலமுதம் தாங்கிவந்த அன்னையைச்!
சிந்துமாடிக் கைகள் கூப்பிச் சிரங்க விழ்த்து
                எந்நாளும் என்றனாவி உன்றனுக்கே என்றிடு!

நான் பிறந்து நான் வளர்ந்து நான் மணந்த நாட்டிலே
                வீண்குழப்பம் இல்லையில்லை வேற்றுமைகள் இல்லையே!
தேன்சுரக்குப் பூவடா நம் தேசமக்கள் நெஞ்சமே
                வீண்பகைக்கு வித்திடோம் வீணர்களை விட்டிடோம்!

தாய் மண்ணைக் காப்போம்

அரசாங்கம் மாணவர்களிடையே ஒற்றுமையை வளர்க்க பல வழிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவற்றில் ஒன்றுதான் வாவாசான் பள்ளி. மாணவர்களிடையே ஒற்றுமையை வளர்க்க அரசாங்கம் மேற்கொண்டுள்ள வழியே இது.


    மாணவர்களிடையே ஒற்றுமை இருப்பது மிக முக்கியம் என்பதைக் கல்வி அமைச்சு கருதுகின்றனர். அதுமட்டுமின்றி, பல்லின மாணவர்களின் பாரம்பரிய பண்பாடுகளை நிலை நாட்டவும் அரசு நாட்டம் கொண்டுள்ளது. ஆகவே, வாவாசான் பள்ளி இவை அனைத்தையும் பூர்த்திச் செய்யும் என்ற எதிர்ப்பார்ப்புடன் எழுந்ததே வாவாசான் பள்ளி.




   வாவாசான் பள்ளியில் தேசியப் பள்ளி, சீனப்பள்ளி, மற்றும் தமிழ்ப்பள்ளி ஒரே வளாகத்தில் அமைந்திருக்கும். இங்குப் பல்லின மாணவர்கள் ஒன்றாக இணைந்து விளையாடுவார்கள். அதுமட்டுமா, ஒன்றாக அமர்ந்து உணவு உண்ணுவார்கள்.


    வாவாசான் பள்ளியில் எல்லா சமூக சமய மக்களின் உணவுகள் விற்கப்படும். தத்தம் சமயம், பண்பாட்டிற்கு ஏற்காத சில வகை உணவுகளும் இங்கு விற்கப்படுவதில்லை.

 
 அதுமட்டுமின்றி, மாணவர்கள் பல்லின மக்களின் கலாச்சரங்களையும் அறிந்து கொள்ள முடியும். வாவாசான் பள்ளியில் பல்லின கலாச்சார நடனங்களும் கற்றுத்தரப்படுகின்றன. ஜொகெட், ஜப்பின், இணாங், பரதம், கோலாட்டம், விசிறி நடனம்  மற்றும் சிங்க நடனம் போன்றவை நம் நாட்டின் பாரம்பரிய நடனங்களாகும்.








    வாவாசான் பள்ளியில் ஒவ்வொரு வருடமும் பண்பாடு வாரம் எனும் நிகழ்வும் நடத்தப்படுகிறது. இதுபோன்ற நிகழ்ச்சியில் மலேசியாவில் வாழும் பல்லின மக்களின் பாரம்பரியப் பண்பாடுகளை மாணவர்கள் நடித்துக் காட்டுவார்கள். மலாய் மாணவர்களை ஜோகெட், இணாங் நடனங்களும், இந்திய மாணவர்கள் பரத நாட்டியம், கோலாட்டமும், சீன மாணவர்கள் சிங்க நடனம், விசிறி நடனமும் ஆடுவார்கள். இந்நிகழ்வுகளில் பல சுவரொட்டிகளும் தொங்கவிடப்படும். இச்சுவரொட்டிகள் பல்லின மக்களின் பாரம்பரிய பண்பாடுகளைச் சித்தரிக்கும்.
  
வாவாசான் பள்ளி மலேசியாவில் வாழும் பல்லின மக்களிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும் என்றால் அது உண்மையே. பிற சமூகப் பண்பாடுகளை மதிக்கும் சமுதாயமாகவும் குடிமகனாகவும் இப்பள்ளி மாற்றுகிறது.



    இத்திட்டம் நாட்டில் நிலவி வரும் சமூகச் சீர்கேடுகளையும் களைய உதவும். ஆகவே, ஒவ்வொரு பள்ளியும் வாவாசான் பள்ளியாக மாறினால், நம் நாட்டில் ஒற்றுமை பல்லினங்களுக்கிடையே அதிகமாகக் காணலாம்.

வாவாசான் பள்ளி

வாழ்க்கைக்கு அடிப்படையாக விளங்குவது குடும்பம். குடும்பம் ஒரு கோவில் என்றனர் நமது முன்னோர். கோவிலைச் சுற்றியே இந்தியச் சமூகம் நெடுங்காலமாக அமைந்து வந்திருக்கிறது. சமூகத்தின் ஆணி வேர் குடும்பம் என்பதால் அது கோவில் என அழைக்கப்படும் தகுதி உடையது.

சமுதாயத்தின் அடிப்படையே குடும்பம்தான். பிள்ளைகளுக்கு வீடுதான் முதல் பள்ளிக்கூடம், பெற்றோரே முதல் ஆசான்கள். ஒரு தனி மனிதனாகவும் சமுதாயத்தில் ஓர் உறுப்பியமாகவும் எதிர்காலத்தில் விளங்குவதற்கான அடிப்படை நிலை அங்குதான் உள்ளது. ஆகையால்தான், பெற்றோர்களுக்கும் பிள்ளைகளுக்கும் இடையேயுள்ள உறவு மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. நம் முன்னோர்கள், பெற்றோர்களை அனைவரும் தெய்வமாக எண்ணி மதிக்க வேண்டும் என்ற அரியதொரு கருத்தை அருளிச் சென்றுள்ளனர்.  இதனையே வேத வாக்காகக் கொண்ட சிலர் பல நூற்றாண்டுகளாக இவ்வழக்கத்தைப் பாதுகாத்துள்ளனர். ஆனால், இன்றோ இந்நிலை மாறிப்போய்ப் பிள்ளைகள் தங்களை மதிப்பதில்லையென்றும்; தங்களின் சொற்படி நடப்பதில்லையென்றும் பெற்றோர்கள் சிலர் முறையிடுகின்றனர். அதே வேளையில், குறைகூறும் பிள்ளைகளோ, பெற்றோர்கள் தங்களைப் புரிந்து கொள்வதில்லை என்று மறுபக்கம் புலம்புகின்றனர்.






மனித இனத்துக்கு முக்கியமான சந்தோஷம் நல்ல குடும்பச் சூழல்தான். கைநிறைய சம்பாதிக்கும் பலரும் ஏங்குவது அன்புக்குதானே!! கொடுக்க கொடுக்க ஆனந்தம் தருவது அன்பு. இனிமையான கதகதப்பான குடும்பச் சூழல் இந்த ஏக்கத்தை நிவர்த்தி செய்துவிடும். நம்பிக்கை, புரிதல், கருணை ஆகியவற்றை அள்ளித் தரும். சொர்க்கத்தை இறந்த பின் தான் அடைய வேண்டுமெனும் ஏக்கம் இல்லாமல் வாழும் வீடே சொர்க்கமாகி பிரச்சனைகள் எதுவந்தாலும் சுமூகமாகத் தீர்க்க வழி கொடுக்கும். இப்படிப்பட்ட சூழலில் வளரும் குழந்தைகள் வளர்ச்சி அளவிட முடியாமல் அதீதமாகவே இருக்கும்.



    சொத்து கொடுக்கிறோமோ இல்லையோ அன்பையும், கல்வியையும் கொடுத்தால் போதும். அதீத அன்பு ஆளையே அழித்துவிடும். கவனம் தேவை. அன்பு என்றால் தன்னலமற்ற அம்மாவின் அன்பைத்தானே அனைவரும் சொல்வோம்.

அன்னைதான் குழந்தையின் முதல் ஆசிரியை. இதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.     அன்னையின் அன்பு, தந்தை கற்றுக்கொடுக்கும் உலக அறிவு இரண்டும் முறையாகச் சரியாகக் குழந்தைக்குக் கிடைத்தால் அதன் வளர்ச்சி மேல் சந்தேகமே வேண்டாம்.


    பெற்றோர் தம் குழந்தைகளைச் சிறு வயது முதலே, தொட்டு அணைத்து வளர்த்து வந்தால் பிள்ளைகள் வளர்ந்த பின்னும் பாசம் குறையாது. தாய் தன் குழந்தையை மார்போடு அணைத்து, முத்தமிட்டுக் கொஞ்சி, உறவாடுவதன் மூலம் ஆழமான பாசத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார், அதுபோல, தந்தையும் தன் பிள்ளைகளை மடியில் கிடத்தி, தோளில் தூக்கி, கரம் பிடித்து நடத்திச் சென்று பாதுகாப்பு உணர்வை ஊட்டுகிறார். சிறுவயதில் ஏற்படும் இந்த அனுபவம் ஆழ்மனதில் தங்கி, பிள்ளைகளுக்குப் பெற்றோரின் மேல் ஒரு பாசப் பற்றுதலை உண்டாக்குகிறது.
    பெற்றோர்கள் தம் பிள்ளைகளுடன் தினமும் பத்து நிமிடங்களாவது எந்த இடையூறுமில்லாமல்,  (தொலைபேசி, தொலைக்காட்சி, விருந்தினர்கள்) உறவாடலுக்குச் செலவிட வேண்டும். இந்த நேரத்தில் அவர்களுடைய பாடம், கல்வி போன்றவை பற்றிப் பேசாமல், அவர்களின் பாசம், நண்பர்கள், இலட்சியம், கனவுகள் பற்றிப் பேசுங்கள்.

    இந்த நேரம் அவர்களின் எதிர்காலத்தை உருவாக்கும் அடிக்கல் நேரம் மட்டுமல்ல, பெற்றோரின் அக்கறையை, பரிவைப் பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்லும் நேரமும் கூட. இந்த நேரங்களைப் பிற்காலத்தில் பிள்ளைகள் பெரிதும் எண்ணிப்பார்த்துப் பெருமிதம் கொள்வர்.


அம்மா, அப்பா, அண்ணன், அக்காள், தம்பி, தங்கை, தாத்தா மற்றும் பாட்டி அடங்கியதே ஒரு குடும்பம். குடும்பத்தில் ஒவ்வொருவரும் தங்கள் கடமைகளைச் சரிவர செய்ய வேண்டும். நம் குழந்தைகளுக்குச் சமய அறிவை ஒவ்வொரு குடும்பமும் புகுட்ட வேண்டும். இது குழந்தைகள் தீய வழிகளில் செல்லாமல் இருக்க வழிவகுக்கும். ஆகவே, நல்லதொரு குடும்பத்தைப் பிள்ளைகளுக்கு அளித்து நல்லவிதமாக வாழ வழி செய்வோம்.

குடும்பம் ஒரு கோவில்

மலேசியாவில் பண்டிகையின் போது நல்லெண்ண விருந்து நிகழ்வினை ஆங்காங்கே நடத்துவது பழக்கமாகவிட்டது. குறிப்பாக ஹரிராயா, தீபாவளி, சீனப் புத்தாண்டு மற்றும் கிறிஸ்மஸ் போன்ற மலேசியர்களின் முக்கிய பெருவிழாக்களின் போது ஆங்காங்கே நல்லெண்ணவிருந்து நடைபெற்று வருகிறது.

நல்லெண்ண விருந்து என்பது பண்டிகையின் போது மற்ற இனத்தவர்களோடு இணைந்து கொண்டாடப்படும் விருந்துபசரிப்பு ஆகும். இரு பண்டிகைகளை இணைத்தும் நல்லெண்ண விருந்து கொண்டாடப்படுகிறது. எடுத்துக்காட்டாக தீபாராயா (Deeparaya), கிறிஸ்மஸ் புத்தாண்டு ஆகும்.

நல்லெண்ணவிருந்து பொதுவாக உயரிய பதவி வகிப்பவர்களின் வீட்டில் நடைபெறும். பிரதமர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் அதிகாரிகள் போன்றோர் அதிக அளவில் நல்லெண்ண விருந்தை விமரிசையாகக் கொண்டாடுவர். ஆனால் இன்று பொது இயக்கங்கள், பள்ளிக்கூடங்கள், அரசு அலுவலகங்கள், பொது மக்கள் என அனைவருமே நல்லெண்ண விருந்தினை நடத்துகின்றனர். மேலும் வீட்டில் மட்டுமே நடந்த இந்நிகழ்வு இன்று பெரிய மண்டபங்களில்  இசைநிகழ்ச்சியோடு நடைபெறுகிறது.

நல்லெண்ண விருந்துக்கான  முக்கிய நோக்கம் மக்களிடையே ஒற்றமை வலுவடையும் என்பதே ஆகும். ஆம் பல இன மக்கள் வாழும் நம் நாடு சுபிட்சமாக இருக்க ஒற்றுமை மிக முக்கியமாகும். எனவே தான் ஆண்டு தோறும் நல்லெண்ண நிகழ்வுகள் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. மேலும் பிற இன மக்கள் கலந்து கொள்வதால் மற்றவர்களுடைய பண்டிகையைப் பற்றியும் பண்பாட்டைப் பற்றியும் அறிய முடிகிறது. எடுத்துக் காட்டாக, சீனப் புத்தாண்டின் போது, சீன மக்கள் மட்டும் அல்லாது பிற இனத்தவர்களும் சீன பாரம்பரிய உடையை உடுத்தி மகிழ்ச்சியாக நல்லெண்ண விருந்தில் கலந்து கொள்கிறார்கள். அது மட்டும் அல்லாமல் நல்லெண்ண விருந்தில் உடல் பேறு குறைந்தோர், வசதியற்றோர் போன்றவர்களுக்கும் சில பரிசுகளும் அன்பளிப்பு பணங்களும் வழங்கப்படுகிறது.இதன் வழி ஒட்டு மொத்த மலேசியர்களும் பெருநாட்களை மகிழ்ச்சியோடு கொண்டாடுகின்றனர்.


 இன்று அனைத்து மலேசியர்களும் மற்ற இனத்தவர்களின் கலாச்சாரம்,பண்பாடு,உணவு முறை மற்றும் பழக்க வழக்கங்களைப் பற்றி நன்கு தெரிந்து கொள்ள நல்லெண்ண விருந்து பெரும் பங்காற்றுகிறது என்பது வெள்ளிடைமலையாகும்.

நல்லெண்ண விருந்து